உலகில் பிறக்கும் அனைவரது ஜாதகத்திலும் ஒரு சுப யோகமாவது இருந்தே தீரும் என்று நமது ஜோதிட மகரிஷிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜோதிட ரீதியாக, தர்ம-கர்மாதிபதி யோகம், பஞ்ச மகா புருஷ யோகங்கள், குரு-மங்கள யோகம், சந்திர-மங்கள யோகம், குரு-சந்திர யோகம், கஜகேசரி யோகம், விபரீத ராஜயோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம் உள்ளிட்ட பல்வேறு சுப யோகங்களும், பந்தன யோகம், சகட யோகம், சூல யோகம், பாப-கர்த்தாரி யோகம் உள்ளிட்ட பல்வேறு அசுப யோகங்களும் சேர்ந்து நூற்றுக்கும் மேலான ஜாதக யோகங்கள் இருக்கின்றன. மேற்குறிப்பிட்டவை தவிர, பஞ்சாங்கத்தின் நான்காவது அமைப்பான நித்திய நாம யோகமும் கணக்கில் கொள்ளப்படுகிறது. விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், சவுபாக்யம், சோபனம் உள்ளிட்ட 27 நாம யோகங்கள் உள்ளன. நல்ல காரியங்கள் செய்வதற்கான முகூர்த்த நாள் தேர்வில் வாரம், திதி, நட்சத்திரம், கரணம் என்ற வரிசையில் யோகமானது நான்காவதாக அமைந்து முக்கியத்துவம் பெறுகிறது.